🇱🇰 English | සිංහල | தமிழ் — Call Us: +(94)112655653 / +(94)777655396 - E-mail

உளவியல் ஆன்மீக சிகிச்சை

சிறைக் கைதிகள்

விஸ்வ நிகேதன் நிலையத்தினால் நடாத்தப்பட் இந்த தனித்துவமான நிகழ்ச்சி உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இது அமைதி நிலையத்திற்கான கலாநிதி ஏ.ரீஆரியரத்ன அவர்களின் தொலைநோக்கினை – “ஆன்மீக விழிப்புணர்வு” மிக உயர்ந்ததொரு நிலைக்கு இட்டுச்செல்கின்றது.

அனைத்து நல்லொழுக்கங்களுக்கும் தீமைகளுக்கும் மனம் தான் பொறுப்பாகவிருக்கின்றது. விடியற்காலையில், வெள்ளை உடை அணிந்த ஆண்கள் குழுவொன்று அமைதியாக விஷ்வ நிகேதன் வளாகத்திற்குள் செல்கிறது. அவர்களின் ஆடைகளில் சில எண்கள் குறிக்கப்பட்டிருப்பதையும், அவர்களின் முகங்களில் உணர்ச்சி-வருத்தம், பயம், குழப்பம், வெறுப்பு மற்றும் துக்கம் ஆகியவை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு கணத்தில் ஒரு ‘தீய மனம்’ இந்த ஆண்களை சக மனிதனின் உயிரைப் பறிக்கவும், ஒரு பெண்ணின் நல்லொழுக்கத்தின் அப்பாவித்தனத்தைத் திருடவும், ஆபத்தான போதைப்பொருள்களை வைத்திருக்கவும் அல்லது மற்றவர்களின் உடைமைகளை அபகரிக்கவும் வழிவகுத்துள்ளது. இவ்வாறாக, கொலை, கற்பழிப்பு, கொள்ளை அல்லது போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக தண்டனை பெற்று, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் அனைவரும் தங்களை மாற்றிக் கொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மன்னிக்கப்படுவதற்கும், ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எண்ணற்ற எதிர்மறை உணர்ச்சிகள் நிறைந்த தங்கள் சொந்த மனங்களிலிருந்து விடுபடுவதற்கும் ஏங்குகிறார்கள்.

விஸ்வ நிகேதன் இந்த நபர்களுக்கு அவர்களின் உள்நிலைகளை ஆராய்வதற்கும், தியானத்தின் மூலம் அவர்களின் சொந்த மாற்றத்திற்கு அவர்களே பொறுப்பேற்றுக் கொள்வதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இந்த பயிற்சியின் மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்கள் விஸ்வ நிகேதனில் இருந்து வெளியே செல்லும்போது, அவர்களின் கண்கள் நம்பிக்கையுடனும் உறுதிப்பாடுனுடனும், நீதியை நோக்கி முன்னேறுவதற்கான உறுதியுடனும் மின்னுகின்றன.

கைதிகளின் பங்கேற்பை அதிகரிக்கும் வகையில், மேற்படி நிகழ்ச்சிக்கான இடம் தற்போது விஸ்வ நிகேதனில் இருந்து நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலை வளாகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், பொதுவாக மனமகிழ்வை தராத இடமாகவன்றி விலக்கித் தள்ளும் இடமாக கருதப்படும் சிறைச்சாலையை ஆசிரமம் போன்றதொரு இடமாக மாற்றப்படுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தியான நிகழ்ச்சிகள் கைதிகளின் வாழ்க்கையில் பல நிலைகளில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், மனச்சோர்வடைந்தவர்கள் மற்றும் நித்திரையின்றி தவிப்பவர்கள் போன்றவர்கள் தாங்கள் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிகவும் உறுதியானவர்களாக மாறியதாக தெரிவித்துள்ளனர். சரும நோய்கள் மற்றும் தொடர்ச்சியான தலைவலி ஆகியவற்றிலிருந்து விடுபட முடிந்ததென சிலர் ஒப்புக்கொண்டனர். மேலும், தனிப்பட்ட அல்லது சுற்றுச்சூழல் தூய்மையை பொருட்படுத்தாதவர்கள் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

மிக முக்கியமாக, கைதிகளுக்கு ஒருபோதும் புனர்வாழ்வளிக்க முடியாதெனவும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் சிறைச்சாலை அதிகாரிகள் மத்தியில் பொதுவாக நிலவும் மனோபாவத்தை மாற்றுவதற்கு இந்த திட்டம் உதவியது. கருணை, அன்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்களாக கைதிகளை நடத்த வேண்டியதன் அவசியத்தை இந்த திட்டத்தின் மூலம் உணர்ந்ததற்காக அதிகாரிகள் நன்றி தெரிவித்துடன் இவ்வி்டயம் அவர்களின் நிர்வாகத்தையும் எளிதாக்கியது.

தொடர்ச்சியாக தியானத்தில் ஈபட்ட கைதிகள் பெருமளவு மாற்றமடைந்ததுடன் அவர்களில் சிலர் தங்கள் செயல்களுக்கு மன்னிப்புக் கோரி தங்களின் எதிரிகளுக்கு கடிதங்களைக் கூட எழுதியுள்ளனர். தியானத்தின் மன அமைதியை ஏற்படுத்தும் அனுபவத்தின் ஊடாக சமநிலையான மனதைப் பெறுவதன் மூலம், தங்கள் சிறைவாசத்திற்கு காரணமானவர்கள் மீது வெறுப்பையும் பகைமையையும் வளர்த்து வந்தவர்கள், தங்கள் கடந்த காலத்தை உளச்சமநிலையுடன் நோக்கி, ஆன்மீகத்தால் பலப்படுத்தப்பட்ட மனதுடன் எதிர்காலத்தை வரவேற்கின்றனர்.

விஷ்வ நிகேதனில் ஒரு அற்புதமான தியானத்தின் பேரின்பத்தை அனுபவித்த சில கைதிகளின் சில எண்ணங்கள் பின்வருமாறு:

“நான் கொலை செய்தேன். என் மனம் நிம்மதியாக இருக்கவில்லை. எனது மனதில் எழுந்த மனவுறுத்தல் மற்றும் வெறுப்புணர்வுகள் என் மனதை நிரப்பின. எந்த வகையானதொரு தியானத்தைப் பற்றியும் எனக்குத் தெரியாது. ஆனால் விஸ்வ நிகேதனில் தியானம் செய்த மூன்று நாட்களுக்குள், வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். இனி நான் சிறைக்குள் தொடர்ந்து தியானம் செய்வேன், நான் விடுதலையானவுடன் நேர்மையான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற உறுதியுடன் சமுதாயத்திற்குள் செல்வேன்.”
“நான் விஷ்வ நிகேதனுக்குள் நுழைந்தபோது, இயற்கையோடும், சுற்றியுள்ள வளிமண்டலத்தோடும், சூரிய ஒளியுடனும், பசுமையுடனும் இருப்பதை உணர்ந்ததோடு இது தியானத்திற்கு முன்னர் என் மனதைத் தூய்மைப்படுத்தும் ஒன்றாக அமைந்தது. உண்மையில், அந்தச் சூழலே எனக்குப் பாடம் கற்பிப்பதாக உணர்ந்தேன்.”

“தியானப் பயிற்சியின் மூலம் நான் பெற்ற மகிழ்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. நான் இனிபோரும் எந்த குற்றமும் செய்யமாட்டேன் என்று உறுதிபூணுகின்றேன்.”[/testimonial][/one_fifth]

“விஷ்வ நிகேதனில் நான் மேற்கொண்ட தியான நிகழ்ச்சிகள் போன்ற ஆளுமைகளை வடிவமைக்கும் வழிமுறைகள் என் கிராமத்தில் இல்லாதிருந்ததால் நான் இப்போது சிறையில் வாடுகின்றேன். நான் எனது கிராமத்திற்குத் திரும்பியதும் தொடர்ந்து தியானப் பயிற்சியை மேற்கொள்வேன். அத்துடன் நான் ஒருபோதும் மீண்டும் சிறைக்குச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வேன்.”
“நான் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்தாலும் ‘சுதந்திரமாக’ இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டேன்.”
“இந்த இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு நான் மிகுந்த மன வேதனையில் இருந்தேன். நான் இப்போது என் மனதைக் கட்டுப்படுத்தும் விதத்தை என்னால் நம்புவதற்கு கூட முடியவில்லை. இந்த அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நான் உண்மையிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும். நான் விடுதலையாகும் போது சிலரை பழிவாங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அந்த எண்ணங்கள் இப்போது மறைந்துவிட்டன. நான் சிறையில் தியானத்தை தொடர்வேன், மேலும் நான் விடுதலையாகும் போது எனது அனுபவத்தின் மூலம் மற்றவர்களுக்குக் கற்பிக்கவும், எல்லாத் தீமைகளிலிருந்து விலகி இருக்க அவர்களுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்.”
“எனது சக கைதிகளுக்கு அவர்களின் மனதை எளிதாக்குவது எப்படி என்றும் தியானத்தின் மூலம் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்றும் நான் கற்றுக்கொடுக்கப் போகிறேன்.”

துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்

இது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 11 – 18 வயதுடைய பதின்ம வயது தாய்மார்களுக்கான சர்வோதய சுவசெத்த இல்லத்தின் பதின்ம வயது தாய்மார்களுக்கான நிகழ்ச்சித்திட்டமாகும். சர்வோதய சுவசெத்த சேவை சங்கத்தினால் நடாத்தப்படும் வதிவிட பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சிறுவர்கள் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால் அல்லது நீதிமன்றங்களினால் ஆற்றுப்படுத்தப்பட்டவர்களாகும். அவர்கள் பெரும்பாலும் புறக்கணிப்பு, குடும்ப வன்முறை மற்றும் உடல், உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இன்னல்களினால் பாதிக்கப்பட்டவர்களாகும். குழந்தை வளர்ச்சியின் முக்கியமான கட்டங்களின் போது குடும்ப மற்றும் சமுதாய பின்னணியில் குறிப்பாக உளவியல் மற்றும் மனவெழுச்சி சார்ந்த விடயங்களில் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாதக நிலைகளை சந்தித்த இவர்கள் நிறுவன பராமரிப்புக்கு அனுப்பப்படும் போது தொழில்வாண்மை ரீதியிலான உளவியல் மற்றும் உளசமூக ஆதரவு தேவைப்படுபவர்களாக உள்ளனர். மிகுந்த மன உளைச்சல், மனச்சோர்வு, மனநிலை மாற்றங்கள், நம்பிக்கையின்மை, பங்கேற்காமை, ஆத்திரம், சுய தீங்கு அல்லது தற்கொலை எண்ணங்கள் அடங்கிய சிக்கல்கள் அவர்களின் அன்றாட வேலைகள், கல்வி ஆகியவற்றில் அவர்களின் பங்கேற்பைத் தடுப்பதுடன் பெரும்பாலும் நடத்தை சார்ந்த சிக்கல்களை விளைவிக்கிறது. அவர்கள் தங்கள் சொந்த மனவெழுச்சியை கையாள்வதற்கும், சமவயதுடையவர்களுடன் சகஜமாக பழகுவதற்கும் பராமரிப்பாளர்ளுடன் சுமூகமாக நடந்துகொள்வதற்கும் போராடுகிறார்கள். எனவே, அவர்கள் அனுபவித்த அதிர்ச்சிகளிலிருந்து குணமடையவும், மீண்டெழவும் குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவம் வரையில் அவர்கள் சந்திக்க வேண்டிய சோதனைகள், சூழ்ச்சிப் பொறிகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த சவாலான பயணத்தை மேற்கொள்ள அவர்களுக்கு ஒரு உதவி தேவைப்படுகின்றது. ஆகவே, உளசமூக சிகிச்சை நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர்களுக்கு நீடித்த குணப்படுத்தும் விளைவினை ஏற்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கலை சிகிச்சை, தியானம், விழிப்புணர்வு நிலை மற்றும் அன்பிரக்கம் ஆகியவற்றை மையப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் இந்த குணப்படுத்தும் செயன்முறையை எளிதாக்குவதற்கான அடிப்படை வழிமுறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலை மற்றும் படைப்பாற்றல் என்பன உள் உணர்வுகள், பதட்டங்கள் மற்றும் சங்கடங்களை வெளிப்படுத்தும் வழிமுறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுய வெளிப்பாட்டினை ஈடுபடுத்திக்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாட்டின் முடிவிலும், அவர்கள் தியானம், விழிப்பணர்வு நிலை, இயற்கை மற்றும் அன்பிரக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலான குணப்படுத்தும் நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்கின்றனர், அவற்றை இதைப் போன்ற ஒத்த மன அழுத்தம் அல்லது குழப்பமான சூழ்நிலைகளுக்கு பதிலளிப்பதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும். அவர்கள் படிப்படியாக சுய அன்பு, சுய இரக்கம், சுய மதிப்பு மற்றும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கும் நட்பை உருவாக்குவதற்கும் கற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் அவர்கள் ஒரு சிறப்பு செய்தியையும், வாழ்க்கை, உலகம் மற்றும் உறவுகள் பற்றிய புதிய கண்ணோட்டத்தையும் எடுத்துச் செல்கின்றனர்.

சட்டத்துடன் முரண்படும் சிறுவர்கள்

விஸ்வ நிகேதன் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த பாடசாலைகளில் 3 ஆண்டுகளாகத் திருத்தத் தண்டனை அனுபவித்து வரும் சிறுவர்களுக்கு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தி வருகிறது. தாய்மார் புலம்பெயர்வதாலும் வறுமை காரணமாகவும் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் காரணமாக பெரும்பாலான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அன்பான, பராமரிக்கின்ற மற்றும் பாதுகாப்பான குடும்பச் சூழலை இழந்துள்ளனர். தங்கள் குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களின் செயல்களால் அவர்கள் தங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள குற்றச்செயல்களை செய்வதற்கு நிர்பந்திக்கப்பட்டதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். இந்த பாதகமான மனப்பான்மை, தங்கள் மீதும் தங்கள் அன்புக்குரியவர்கள் மீதும் வெறுப்பையும் கோபத்தையும் விதைத்துள்ளது. மனநல ஆன்மீக சிகிச்சை முறைகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்களைப் பற்றிய சுய அன்பையும் சுய இரக்கத்தையும் வளர்ப்பதன் மூலம் சுய வெறுப்பு, கோபம், பழிசுமத்தல் மற்றும் குற்ற உணர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளையும் மனவெழுச்சிகளையும் மிகவும் திறமையான முறையில் நிர்வகிக்கவும் அவர்களின் அன்புக்குரியவர்களின் மீது அன்பிரக்கம் மற்றும் பரிவினை வெளிப்படுத்துவதன் மூலம் மன்னிப்பதற்குமான கலையைக் கற்றுக்கொள்கின்றனர்.
Back to Top