ஆரம்பத்தில் அமைதி நூலகமானது அமெரிக்காவில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் அமைதி நூலகமான அட்லாண்டாவிலிருந்து நன்கொடையாகக் கிடைத்த சுமார் 2,000 புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்களை கொண்டு நிறுவப்பட்டது. கலாநிதி ஏ.டி. ஆரியரத்ன அவர்கள் தனது சொந்த நூலகத்தையும் இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் சேகரிப்பில் சேர்ப்பதற்காக நன்கொடையாக வழங்கியதுடன், தனது சொந்த நிதியில் அச்சிடப்பட்ட திரிபிடகத்தின் சிங்கள மொழிபெயர்ப்பையும் வழங்கினார்.
இந்த நூலகத்திற்கு போல் பெர்னாண்டோ, திருமதி நீதா ஆரியரத்ன ஆகியோரால் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன் ஏ.ரீ. ஆரியரத்ன அறக்கட்டளையின் நிதியின் மூலமாகவும் மேலும் பல புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
ஏசியா பவுன்டேஷன் புத்தக றாக்கைகளை அமைப்பதற்காக நிதி உதவியினை வழங்கியுள்ளது. தற்போது நூலகத்தில் தத்துவம், மதம், சுயசரிதைகள், சமூக விஞ்ஞானம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 4,000 இற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான நூல்கள் மற்றும் பருவ இதழ்கள் உள்ளன. நூல்கள் ஒரு குறியீட்டில் வகைப்படுத்தப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கலாநிதி ஏ.டி. ஆரியரத்ன அவர்கள் எழுதிய புத்தகங்களின் தொகுப்பும் புகைப்படங்களும் இந் நூலகத்தில் உள்ளன.